ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி: ஊரடங்கை மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அத்யாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.


உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 5000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு காலத்தை மேலும் அதிகப்படுத்த பல மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதனை ஏற்று ஊரடங்கினை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.